ஹிந்து சமய அறநிலையத்துறை அராஜகம்

ஹிந்து சமய அறநிலையத்துறை அராஜகம், தரங்கெட்ட நிலையில் ஹிந்து சமய அறநிலையத்துறை, தொடரும் அத்துமீறல்கள் என்ற தலைப்பில் இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராகுத் தலமான திருநாகேஸ்வரத்தில் 100 ரூபாய் டிக்கெட் 500 ரூபாய்க்கு ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் விற்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்தன்று பகிரங்கமாக பிளாக்கில் டிக்கெட் 2ஆயிரத்திற்கு விற்ற விடியோ வெளிவந்தது. நேற்று முன்தினம் வரலாற்று சிறப்புமிக்க, தொன்மையான தஞ்சை பெரிய கோவில் உள்ளே முஸ்லிம் குடும்பம் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டுள்ளனர். அதனை அங்கு வந்த பக்தர்கள் தட்டிக்கேட்ட விடியோ வெளிவந்தது. சில தினங்களுக்கு முன் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஒரு முஸ்லிம் பெண் புர்காவோடு சுவாமி சன்னதி வரை சென்றதும், அதற்கு முன் சென்னை கபாலீஸ்வரர் கோவிலின் உள்ளே வந்த முஸ்லிம் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தது மறந்து இருக்க மாட்டோம். புனிதமான கோயில் உள்ளே வந்து அசுத்தப்படுத்தும் போதும், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. சில மாதங்களுக்கு முன், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கார் குண்டு வெடிப்பு முஸ்லிம் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது. அந்த சம்பவத்தை விபத்தாக சித்தரிக்க தமிழக அரசு எத்தனை முயற்சிகள் எடுத்தது? ஆனால் இரண்டு நாட்கள் முன்பு கோவை, பெங்களூர் குண்டு வெடிப்புகளை கோவிலை மையமாக வைத்து நடத்தியதாக ஐ.எஸ். அமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளது. இனியாவது தமிழக அரசு மக்களை காக்க நேர்மையாக செயல்பட வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறை, கோயில்களை பாதுகாக்கத் தான் ஏற்படுத்தப்பட்டது. கோயில் வருமானத்தில் இருந்துதான் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் சம்பளம் தரப்படுகிறது. உண்ணும் உணவிற்கு விசுவாசமாக நடக்க வேண்டாமா? கோயிலின் புனிதத்தை கெடுப்பதை வேடிக்கை பார்ப்பதும், சினிமா தியேட்டர் போல பிளாக்கில் டிக்கெட் விற்பதும் அநியாயம் இல்லையா? தமிழக அரசு, கோயில் புனிதத்தை காக்கவும், கோவில் பாதுகாப்பை உறுதி படுத்தவும் தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.