ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல்

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, தனது ஊதுகுழலான “வாய்ஸ் ஆஃப் கோரோசன்” பத்திரிகை மூலம் ஹிந்துக்கள், பா.ஜ.கவினர் மற்றும் பாரதத்தின் பாதுகாப்புப் படைகளை குறிவைத்தும், காஷ்மீரில் முஸ்லீம் அல்லாதவர்களைக் கொல்லவும் முஜாஹிதீன்களை வலியுறுத்தியது. மேலும், தென் பாரதத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தனது இருப்பை வெற்றிகரமாக நிலைநிறுத்தி உள்ளதாக கூறி, மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்புக்கும், கடந்த ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்புக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்கிறது என தெரிவித்துள்ளது. இருப்பினும், இதழின் கட்டுரை எந்த தென் மாநிலத்தில் அதன் ‘முஜாஹிதீன்கள்’ செயல்படுகின்றனர் என்பதைக் குறிப்பிடவில்லை. ஆனால் வல்லுநர்கள் அவர்கள் பெரும்பாலும் கேரளாவில் இருப்பதாகவும், தமிழகம் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளுக்கும் அவர்கள் பரவத் துவங்கியுள்ளனர் என்று சந்தேகிக்கின்றனர். “கோயம்புத்தூர், மங்களூருவில் எங்கள் தாக்குதல்களை நீங்கள் கருத்தில் கொள்ளவில்லையா?, அங்கு எங்கள் சகோதரர்கள் எங்கள் மதத்தின் மரியாதைக்காக பழிவாங்கினார்கள் மற்றும் குஃபார்களை (முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் நம்பிக்கை இல்லாதவர்கள்) அவர்கள் பயமுறுத்துகிறார்கள்” என அதில் கூறப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் இடங்களில் சோதனைகளை நடத்தி இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த ஒப்புதல் வாக்குமூலம் வெளியாகியுள்ளது நினைவு கூரத்தக்கது.

“உங்கள் அத்துமீறல் எல்லா வரம்புகளையும் தாண்டியது. இஸ்லாம் மற்றும் அதன் மக்கள் மீதான உங்கள் வெறுப்பு வார்த்தைகளிலும் செயல்களிலும் காட்டப்பட்டுள்ளது. உங்கள் அமைதி குழப்பமாகவும், உங்கள் பாதுகாப்பு பயமாகவும், உங்கள் மகிழ்ச்சி துக்கமாகவும் மாறும், மேலும் அல்லாவின் விருப்பத்தால், நீங்கள் அல்லாவை மட்டுமே வணங்கும் வரை எந்த காஃபிருக்கும் பாதுகாப்போ அமைதியோ இருக்காது” என்று ஐ.எஸ்.கே.பி பத்திரிகை கட்டுரை மேலும் கூறுகிறது. மேலும் காஷ்மீரை (முஸ்லிம் அல்லாதவர்களைக் குறிவைத்து), பாபர் மசூதி மற்றும் குஜராத் கலவரங்களுக்குப் பழிவாங்க முற்பட்டது. பாகிஸ்தானுக்கும் அதன் மத அறிஞர்களுக்கும் எதிரான தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் நாட்டை “இஸ்லாமிய உம்மாஹ்வின் உடலில் உள்ள செல் கட்டி” என்று குறிப்பிட்டது. இதைத்தவிர, அமெரிக்க வான்வெளியில் சீன கண்காணிப்பு பலூன்களின் சம்பவங்கள் குறித்து பத்திரிகையில் ஒரு பிரத்யேக கட்டுரை பேசுகிறது.