வடமாநிலத் தொழிலாளர் விவகாரத்தில், தமிழக காவல் துறை என்ன செய்தது என்பதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் இரட்டை வேடம் போடுவதாக தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், இரட்டை வேடங்கள் போடுவது என்பது தி.மு.கவினருக்கு இயல்பானது. ‘ஹிந்தி தெரியாது போடா’ என்று முதல்வரின் மகன் ‘டி ஷர்ட்’ கலாச்சாரத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடங்கிவைத்தார். விமான நிலையத்தில் என்னிடம் ஹிந்தியில் பேசினார்கள் என்று முதல்வரின் தங்கையும், தி.மு.க எம்.பியுமான கனிமொழி பொய் புகார் தெரிவித்தார். இவ்வாறு வடமாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் அவர்கள் தான் தொடங்கி வைத்தார்கள். தற்போது சமூக ஊடகங்களில் உலவும் பல பொய்யான செய்திகளுக்கு இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது. முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வடமாநிலத்தவர் மீது திரும்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான், ‘வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?’ என்று கேட்டிருந்தேன். அதனால் பிரச்சனையை திசைதிருப்ப, இப்போது என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வட மாநிலங்களில் உள்ள சட்டப் பேரவைகளில் தமிழகத்துக்கு எதிரான கண்டனக் குரல்களை கண்ட பிறகு, அவர்களுக்கு எழுந்த அச்சத்தால், இப்போது பிரச்சினையைத் தீர்த்துவைக்க முயற்சி செய்கின்றனர். இப்படிதொடங்கி வைக்கப்பட்ட வெறுப்பு அரசியலால், திருப்பூரில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்றபோது, காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? காவல் துறை அதிகாரிகளுக்கும் தி.மு.கவினருக்கும் தமிழக முதல்வருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில், காவல் துறையின் நடவடிக்கைகளை தாமதப்படுத்தியது யார்? இதுகுறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். அடிக்கடி திருச்சிக்கு செல்லும் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, திருப்பூருக்கு ஏன் நேரில் சென்று விசாரிக்கவில்லை? திருப்பூரில் உள்ள உளவுத் துறை என்ன செய்து கொண்டு இருந்தது? எனவே, வடமாநிலத் தொழிலாளர் விவகாரத்தில் தமிழகக் காவல் துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை சி.பி.ஐ விசாரித்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்” என கூறியுள்ளார்.