மாசிமகம்

பாரதம் முழுவதும் ஹிந்துக்களால் கொண்டாடப்படும் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றான மாசிமகம் இன்றும் நாளையுமாக அனுசரிக்கப்படுகிறது. பால்குன் பூர்ணிமா எனவும் அழைக்கப்படும் இவ்விழாவை கேரளத்தில் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் “மகம் தொழுதல்” என்று விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். தேவியே அந்தப் புண்ணிய ஸ்தலத்தில் ஆவிர்ப்பவம் செய்த நாளாக இது கருதப்படுகிறது. புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழாவும் இந்நாளில் தான் என்பது கூடுதல் செய்தி. இறை தொடர்பான இத்தகைய கொண்டாட்டங்கள் இயற்கைச் சுழற்சியுடன் தொடர்பு கொண்டவை. எனவே மிகத் தொன்மைக் காலத்திலிருந்தே சனாதன தர்மத்தில் பற்றுக் கொண்டோர் இவற்றைக் கொண்டாடி வருகிறார்கள்.

தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் என அடுத்தடுத்து வரும் அனைத்து மாதப் பௌர்ணமி நாட்களுமே புனித தினங்களாகவும், கொண்டாட்டத்திற்குரிய நாட்களாகவும் உள்ளன என்பதை இங்கே உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிந்து கொள்கிறோம். பொதுவாக பங்குனி உத்திரத்துடன் சேர்ந்துதான் ஹோலிப் பண்டிகை. வரும். இந்த ஆண்டு மாசி மகத்துடன் சேர்ந்து வருகிறது. சந்திரமான, சௌரமான பஞ்சாங்கங்கள் அடிப்படையில் இந்தப் பண்டிகை நாட்கள் வேறுபாடுகள் வருகின்றன. இந்த மாதங்களில் தான் மேகமூட்டமோ, மழையோ பனியோ ஏதுமின்றி பாரதத்தின் பருவநிலைப்படி பௌர்ணமி நாளில் முழுநிலவின் ஒளி மிகவும் ரம்மியமாக இருக்கும். இதனால் தான் நீராடுதல், ஆலயங்களில் தீர்த்தவாரி போன்ற வைபவங்கள் இந்த நாட்களுடன் இணைந்துள்ளன.

சென்னையில், கடலோரக் கோயில் அந்நிய ஆக்ரமிப்பால் அழிந்து விட்டாலும், “மெரினா” என்று கடற்கரைக்கே ஆங்கிலப் பெயரும் வந்துவிட்டாலும் கண்கூடாக நாம் பார்ப்பது என்ன? “மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான்” என்ற ஞானசம்பந்தர் பாடல் பொய்யாகாதபடி கபாலீஸ்வரரும், சென்னை மற்றும் சுற்றுப்புற ஆலய தெய்வங்களும் தீர்த்தவாரி செய்து பக்தகளுக்கு அருள்கின்றனர். கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் கோயிலிலும் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலும் மாசித் தேரோட்டம் களைகட்டுகிறது. பச்சை சார்த்தி பக்தர்களைப் பரவசப்படுத்தி பேரருள் புரிகிறார் செந்திலாண்டவர். மற்றும் பற்பல கோயில்களில் தெப்போற்சவமும் உற்சாகமாக நடைபெறுகிறது.

மாக பூர்ணிமா அன்று பகவான் விஷ்ணுவே கங்கையில் வந்து நீராடுவதாக ஐதிகம் என்பதால் வட பாரதத்தின் அனைத்து நதிகளிலும் மக்கள் புனித நீராடுகின்றனர். நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் சந்திரனுக்கு அர்க்கியம் அளித்து விரதத்தைப் பூர்த்தி செய்யும் மரபும் ஆங்காங்கே பரவலாக உள்ளது.

ஆர். கிருஷ்ணமூர்த்தி