குற்றவாளிகள் ஒருபோதும் தப்ப முடியாது

உத்தரப் பிரதேச மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராஜூ பால் என்பவர் 2005ல் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்தவர் வழக்கறிஞரான உமேஷ் பால். பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள தூமன்கஞ்ச் பகுதியில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி, அவர் தனது காரில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்றபோது, சில மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், உமேஷ் பால் மற்றும் அவருக்கு பாதுகாப்புக்கு வந்த காவலர் ஆகியோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக, உமேஷ் பாலின் மனைவி அளித்த புகாரின் பேரில், முன்னாள் எம்.பி அடிக் அகமது அவரது மனைவி மற்றும் மகன்கள் உள்ளிட்டோர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உமேஷ் பால் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அர்பஸ் என்பவரை, பிரயக்ராஜ் மாவட்டத்தின் துமாங்கஞ்ச் பகுதியில் வைத்து கடந்த மாத இறுதியில் காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர். நேற்று உமேஷ் பால் கொலையில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான உஸ்மான் சவுத்ரி என்பவர் காவல்துறை என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். இந்த நபர் தான் உமேஷ் பாலை முதலில் சுட்ட நபர். உஸ்மானை கைது செய்ய முயன்ற போது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதனால் தான் காவலர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் காவல் அதிகரிகள் கூறினர். உமேஷ் பால் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளையும் பிடிக்க அம்மாநில காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இது சம்பந்தமாக சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தயநாத், “குற்றவாளிகள் ஒருபோதும் தப்ப முடியாது” என சூளுரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.