தமிழகத்தில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. வேறு இடங்களில் நடைபெற்ற மோதல் சம்பவங்களின் ‘வீடியோ’ காட்சிகளை தவறாக இணைத்து இப்படி பொய்யான தகவல் பரவியதால் வடமாநில தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். அவர்களில் சிலர் தமிழகத்தில் இருந்து வெளியேறவும் தொடங்கினர். இந்த விவகாரம் பீகார் சட்டசபையிலும் எதிரொலித்தது. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தாக்குதல் வீடியோ பதிவுகள் வதந்தி தான். எனவே வடமாநில தொழிலாளர்கள் இதனை நம்ப வேண்டாம் என்று காவல்துறை தலைவர் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார். மேலும் இந்த பொய் செய்தியை பரப்பிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது. வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம். வடமாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் தகவல் தாருங்கள். வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழக மக்கள் மிகவும் நல்லவர்கள், நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.