வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயா, சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சிக் கூட்டணியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் பாஜக பழங்குடி சமூக மக்கள் கூட்டணி 33 இடங்களையும், கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களையும் புதிதாக துவங்கப்பட்ட திப்ரோ மோத்தா கட்சி 13 இடங்களையும் பெற்றுள்ளன. 37 வருடங்கள் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த பாஜக தற்போது மீண்டும் தனித்து ஆட்சியமைக்க உள்ளது. பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து எதிரெதிர் துருவங்களான காங்கிரஸும் கம்யூனிஸ்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும் பா.ஜ.கவை வெற்றிபெற முடியவில்லை. மாநிலத்தில் மக்கள் நலனுக்காக அமல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களும், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களும் மாநில மக்கள் மனதில் பா.ஜ.கவை மீண்டும் தேர்வு செய்ய காரணமாக அமைந்துள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 இடங்களிலும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி 40 இடங்களிலும் போட்டியிட்டன. கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்த தேசிய மக்கள் கட்சி தனித்தும் போட்டியிட்டது. தேர்தல் முடிவில் பாஜக கூட்டணி 37 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஏழு இடங்களிலும், சுயேட்சைகள் 4 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும் குடியரசுக் கட்சி அதவாலே பிரிவு 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தீவிரவாதிகள் பிரச்சினையை சந்தித்து வந்த நாகலாந்து மாநிலத்தில் மத்திய பா.ஜ.க அரசு ஏற்படுத்திய தீவிரவாதிகளுடனான சமாதான ஒப்பந்தம் நீடித்த அமைதி மற்றும் வளர்ச்சி காரணமாக பாஜக கூட்டணியை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மேகாலயா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டது. தேர்தல் முடிவில் தேசிய மக்கள் கட்சி 25 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் திரிணமூல் காங்கிரஸ் 5 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும் காங்கிரஸ் ஐந்து இடங்களிலும் சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஏற்கனவே வெற்றிபெற்ற பெரும்பாலான கட்சிகள் பாஜகவின் வடகிழக்கு மாநில வளர்ச்சி கவுன்சிலில் இடம் பெற்றுள்ளதால் இம்மாநிலத்தில் மீண்டும் காண்ட்ராட் சங்மா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே மீண்டும் அமையவுள்ளது. மக்கள் நலன், வளர்ச்சித் திட்டங்கள், ஆகியவை இந்த மூன்று மாநிலங்களிலும் ஆட்சியிலிருந்த கட்சிகளே மீண்டும் ஆட்சியமைக்க காரணமாக அமைந்துள்ளது. இந்த மூன்று மாநிலங்களைக் கைப்பற்றியதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வின் ஆதிக்கமே மீண்டும் மேலோங்கியுள்ளது.