டெல்லி அரசுக்கு புதிய அமைச்சர்கள்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ கடந்த மாதம் கைது செய்தது. சிசோடியாவை வரும் 4ம் தேதி வரை சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மணிஷ் சிசோடியா தற்போது சி.பி.ஐ காவலில் விசாரிக்கப்படு வருகிறார். மற்றொரு ஆம் ஆத்மி கட்சி அமைச்சரான சத்யேந்திர ஜெயின் ஏற்கனவே பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த சூழலில் சிறையில் உள்ள ஆம் ஆத்மி அமைச்சர்களான மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் தங்கள் மந்திரி பதவிகளை ராஜினாமா செய்தனர். தங்கள் ராஜினாமா கடிதத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பினர். அதனை அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார். அவர்கள் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள துறைகளுக்கு புதிய அமைச்சர்களை அரவிந்த் கெஜ்ரிவால் நியமித்துள்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆம் ஆத்மி சட்டமன்ர உறுப்பினர்களான சௌரப் பர்த்வாஜ், ஆதிஷி ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஒப்புதலை அளிக்கும்படி டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.