பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பிப்ரவரி 14 அன்று, “அரசியலமைப்பின் படி, ஆளுநருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் என்னை தேர்ந்தெடுத்த மூன்று கோடி பஞ்சாபிகளுக்கு மட்டுமே நாம் பதில் சொல்ல கடமைப்பட்டவன்” என்று ஒரு டுவிட்டர் பதிவிட்டிருந்தார். மேலும் இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் ஆளுநருக்கு அனுப்பினார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பகவந்த் மானுக்கு எழுதிய கடிதத்தில், மார்ச் 3ம் தேதி சட்டமன்றத்தை கூட்டும் விஷயத்தை புரோஹித் குறிப்பிட்டுள்ளார். “உங்கள் டுவீட் மற்றும் கடிதம் இரண்டும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமல்ல, மிகவும் இழிவானதாகவும் இருப்பதால் இந்தப் பிரச்சனையில் சட்ட ஆலோசனையைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். சட்ட ஆலோசனை பெற்ற பிறகே, உங்கள் கோரிக்கை மீது முடிவெடுப்பேன்” என கூறினார். இதையடுத்து பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதில், பஞ்சாப் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரை மார்ச் 3ம் தேதி கூட்ட ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை வழங்கியது. ஆனால் சட்டப்பேரவை கூட்டப்படுவதை தாமதப்படுத்த ஆளுநர் முயல்கிறார் என குற்றம் சாட்டியது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கான அறிவிப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்கெனவே வெளியிட்டுவிட்டார். எனவே, இந்த வழக்கு அர்த்தமற்றது என்றும் குறிப்பிட்டார். இவ்வழகில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ”சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டாலும்,ஒன்றை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். சட்டப்பேரவை கூட்டப்படுவதை தாமதப்படுத்தும் உரிமை ஆளுநருக்குக் கிடையாது. இந்த விவகாரத்தில், ஆளுநர் சட்ட ஆலோசனை கேட்பது இதற்கு முன் நடந்தது கிடையாது. ஆளுநரும் முதல்வரும் அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள். அதற்கு ஏற்ற பண்பை கொண்டிருக்க வேண்டும். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும் ஆளுநரும் முதல்வரும் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆளுநர் கேட்கும் விவரங்களை அளிக்க மாநில அரசு கடமைப்பட்டிருக்கிறது. அதேபோல், அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் கடமைப்பட்டிருக்கிறார்” என தெரிவித்துள்ளது.