2017 மார்ச் 7ல் போபால் உஜ்ஜயினி பயணிகள் ரயிலில், பொதுப் பெட்டியில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. விசாரணையில் இது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் என கண்டறியப்பட்டது. குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் 8 பேரில் 7 பேருக்கு தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) சிறப்பு நீதிமன்றம், மரண தண்டனை விதித்தது. ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, முகமது பைசல், கவுஸ் முகமது கான், அசார், அதிஃப் முசாபர், டேனிஷ், மீர் ஹுசைன், ஆசிப் இக்பால் ஆகியோருக்கு மரண தண்டனையும், அதிஃப் ஈராக்கிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தண்டனையை அறிவிக்கும் போது, நீதிபதி வி எஸ் திரிபாதி, இந்த வழக்கு மிகவும் அரிதான பிரிவில் உள்ளதாகவும், அதனால் குற்றவாளிகள் கடுமையான தண்டனைக்கு தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டார். ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களுக்கு தண்டனை வழங்குவதில் சலுகை காட்டுமாறு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். குற்றவாளிகளின் மனுவை நிராகரித்த நீதிமன்றம், குற்றவாளிகள் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்ததாகவும், அதனால் அவர்களுக்கு எந்தவிதமான சலுகையை கோரும் உரிமை இல்லை என்றும் கூறியது. உயர் நீதிமன்றம் உறுதி செய்த பின்னரே தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியும் என்பது சட்டமாக உள்ளதால், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் அனுப்பி, தூக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும். இதனிடையே, சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் எம் கே சிங் மற்றும் கே கே ஷர்மாவின் கூற்றுப்படி, இந்த வழக்கில் மார்ச் 8, 2017 அன்று லக்னோவில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏ.டி.எஸ்) காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள், நாட்டில் வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏ.டி.எஸ்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏ.டி.எஸ் கான்பூர் பிரிவு அதிகாரிகள், முதலில் முகமது பைசலைக் கைது செய்து விசாரித்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தும் முன், உன்னாவோவில் உள்ள கங்கா காட்டில் குண்டுவெடிப்பை நடத்தி சோதனை செய்துள்ளனர். கான்பூர் உன்னாவ் ரயில் பாதையில் வெடிகுண்டு வைத்தனர். நவராத்திரி சமயத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளை வைக்க சதி செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு பயங்கரவாதியான சைஃபுல்லா, லக்னோவின் துபாக்கா பகுதியில் நடந்த ஒரு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.