மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காலிஸ்தான் இயக்கத்தைத் தடுக்க முயன்றால், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என, காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் மிரட்டல் விடுத்துள்ளார். பிப்ரவரி 27 அன்று, தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் சார்பு சீக்கியர்கள் குழு (எஸ்.எப்.ஜே) நிறுவனர் குர்பத்வந்த்சிங் பன்னு, ஜி20 வெளியுறவுத்துறை அமைச்சக உச்சிமாநாட்டின் போது காலிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டியுள்ளார். மேலும், “நீங்கள் (ஜி20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள்) காலிஸ்தான் வாக்கெடுப்பை ஆதரிக்கும் நேரம் இது. சீக்கியர்களின் சுயநிர்ணய உரிமையை நீங்கள் ஆதரிக்கிறீர்கள், மேலும் பாரதத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டை நீங்கள் அங்கீகரிக்கவில்லை, ஏனெனில் பாரதம் ஒரு நாடு அல்ல, அது, ஒரு நிபந்தனையுடன் கூடிய மாநிலங்களின் ஒன்றியம். மக்கள் அந்த சங்கத்தில் நீடிக்க விரும்பவில்லை என்றால், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு” என கூறியுள்ளார். முன்னதாக, பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள ரோடெவில்லேஜ் பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள துணை மாஜிஸ்திரேட் அலுவலக வளாகத்தில் ‘பஞ்சாப் இந்தியா அல்ல’ என்ற வார்த்தையை காலிஸ்தானி பிரிவினைவாதிகள் கிராஃபிட்டியாக வரைந்துள்ளனர். இந்த கிராஃபிடிக்கு எஸ்.எப்.ஜே பொறுப்பேற்றுள்ளது. காலிஸ்தானி பயங்கரவாதி ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே ரோடெவில்லேஜ் பகுதியை சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.