பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினராக (2005) இருந்த ராஜூ பால் பிரயாக்ராஜ்ஜில் (அலகாபாத்) உள்ள அவரது வீட்டின் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டார். அதில் முக்கியமான சாட்சி உமேஷ் பால். கடந்த சில நாட்களுக்கு முன் உமேஷ் பால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக உத்திரப் பிரதேச சட்டப் பேரவையில் முதல்வர் யோகி ஆதித்தியநாத்துக்கும் எதிர் கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவிற்கும் கடந்த வாரம் கடும் வாக்கு வாதம் நடைபெற்றது. அப்போது, கிரிமினல் குற்றவாளிகள் எவரும் தப்ப முடியாது என்று அப்போது முதல்வர் வாக்குறுதி அளித்தார். இந்த சூழலில், உமேஷ் பால் கொலையில் ஈடுபட்ட ஒரு முக்கிய நபரான முகமது அர்பாஸ் என்ற நபர், பிரயாக்ராஜ்ஜில் உள்ள நேரு வனத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் அர்பாஸ் கொல்லப்பட்டான். இதில் தொடர்புடைய மேலும் இரண்டு நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.