தேசதுரோக ஊழியர்கள் பணிநீக்கம்

தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக மூன்று ஊழியர்களை ஜம்மு காஷ்மீர் அரசு பணிநீக்கம் செய்தது. அவர்களது பயங்கரவாதத் தொடர்புகள் காரணமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 311வது பிரிவின் கீழ் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ரியாசியைச் சேர்ந்த முகமது ஆரிப் ஷேக், பந்திபோராவைச் சேர்ந்த மன்சூர் அகமது இடூ, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் மற்றும் சமூக நலத் துறையின் ஆணையரான குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாராவைச் சேர்ந்த சையத் சலீம் ஆந்த்ராபி ஆகியோர் தான் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள். இந்த ஊழியர்களின் நடவடிக்கைகள் சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளன. பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற அரசின் நலன்களுக்கு பாதகமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டதை அந்த அமைப்புகள் கண்டறிந்தன. காவல்துறையின் கூற்றுப்படி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டுவதில் மன்சூர் அஹ்மத் இடூ முக்கிய பங்கு வகித்தார். மேலும் மத்திய அரசின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்திய இளைஞர்களை அவர்களது அணியில் சேர தூண்டினார். சையது சலீம் அந்தராபி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 2020 டிசம்பரில், போதைப்பொருள் கடத்தலுக்காக ஆண்ட்ராபி மற்றும் ஆறு பேருக்கு எதிராக என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளின் அறிவுறுத்தலின் பேரில் முகமது ஆரிப் ஷேக், சக்திமிக்க வெடிகுண்டுகளை நிறுவியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது இந்த செயலால் மனித உயிர்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. அரசு பணியில் இருந்துகொண்டு அதனை தங்களது பயங்கரவாத செயல்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இத்தகைய தேசவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் கொள்கையை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உறுதியாக கடைபிடித்து வருகிறது.