காஷ்மீர் பண்டிட் படுகொலைக்கு பொறுப்பேற்பு

பாகிஸ்தான் ஆதரவு முஸ்லிம் பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ் இ முகமதுவின் கிளை அமைப்பான காஷ்மீர் சுதந்திரப் போராளிகள் என்ற பயங்கரவாத அமைப்பு, இரு தினங்களுக்கு முன் கொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மாவின் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சஞ்சய் சர்மா சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் அச்சான் பகுதியில் உள்ள தனது கிராமத்தில் உள்ள வங்கியில் ஆயுதம் ஏந்திய காவலராக பணிபுரிந்து வந்தார். அவர் சந்தைக்குச் சென்றபோது இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, காஷ்மீர் சுதந்திர போராளிகள் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “இன்று அதிகாலையில் எங்கள் பணியாளர்கள், சஞ்சய் சர்மா என்ற காஷ்மீரி பண்டிட்டை கொன்றனர். “காஷ்மீர் பண்டிட், ஹிந்துக்கள் அல்லது பாரதத்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் எவரும் இங்கிருந்து அகற்றப்படுவார்கள் என்று நாங்கள் ஏற்கனவே பலமுறை எச்சரித்துள்ளோம். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, இந்த மக்கள் தங்கள் குடியேற்ற காலனித்துவ நிகழ்ச்சி நிரலை மேலும் அதிகரிப்பதற்கான ஆக்கிரமிப்பாளர்களின் கைப்பாவைகளாக செயல்படுகின்றனர். எனவே மீண்டும் சிந்தியுங்கள் அல்லது உங்கள் நேரத்துக்காக தயாராக இருங்கள். எங்கள் தியாகி சகோதரர்களின் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழிவாங்குவோம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். ஆக்கிரமிப்பாளரின் மோசமான திட்டங்களுக்கு எதிராக உள்ளூர் முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தவொரு வெளிநாட்டவருக்கும் அடைக்கலம் கொடுப்பதை நிறுத்துங்கள். வரவிருக்கும் நாட்களில் நாங்கள் இன்னும் பல தாக்குதல்களால் உங்களை ஆச்சரியப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளது.