நிதி மோசடி மையமாக ஆட்சியர் அலுவலகங்கள்

இடதுசாரிகளின் ஆட்சி நடக்கும் கேரளாவில், முதலமைச்சர் நிவாரண நிதியில் நடைபெற்ற ஊழல் மற்றும் நிதி மோசடிகளின் மையமாக ஆட்சியர் அலுவலகங்கள் செயல்பட்டது என்பதும் இந்த முறைகேட்டில் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், முகவர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கேரள முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், இந்த மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறியும் பணியை விஜிலென்ஸ் துறையினர் தொடங்கியுள்ளனர். கள அளவிலான ஆய்வு மற்றும் பல்வேறு அலுவலகங்களில் சேகரிக்கப்படும் தகவல்கள் மூலம் மோசடியின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு அலுவலகங்களில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பக் கோப்புகள் பரிசீலனையில் உள்ளன. முதலமைச்சரின் நிவாரண நிதியை இன்னும் பாதுகாப்பாக நிர்வகிக்க பரிந்துரைகள் அறிக்கையாக அரசுக்கு அளிக்கப்படும் என்று விஜிலென்ஸ் இயக்குநர் மனோஜ் ஆபிரகாம் தெரிவித்தார். இரண்டு வருட விண்ணப்பங்களை பரிசீலித்தபோது அதில் பெரும்பாலானவர்கள் கொல்லம் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் சில விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பம் குறித்து விசாரிக்க முதலமைச்சரின் குறை தீர்க்கும் பிரிவுக்கு போன் செய்தும், அனுமதி பெற்றவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். முனதாக, வருவாய்த்துறைக்கு 25,000 ரூபாய் வரையிலான உதவித்தொகை கேட்டு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்திலும் ஒரே மருத்துவர் சான்றிதழ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறை அமைச்சர் விசாரணை நடத்துமாறு முதல்வரிடம் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.