நாரயண மூர்த்தி அட்வைஸ்

பாரதத்துக்கு பாரபட்சம் இல்லாத நேர்மையான கலாச்சாரம் தேவை. நாடு முன்னேற விரைவான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தேவையற்ற தடைகள் கூடாது என இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாரயண மூர்த்தி தெரிவித்துள்ளார். வெளியுறவு துறை அமைச்சகத்தால் ஏசியா எகனாமிக் டயலாக் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேசிய நாராயண மூர்த்தி, “பாரதத்தில் ஒரு சிறிய பிரிவினர் மட்டுமே கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் நேர்மையாகவும், நல்ல பணி நெறிமுறைகள், ஒழுக்கம், தொழில் தர்மத்துடனும், ஒழுக்கத்துடனும் இருக்கின்றனர். ஆனால், பெரும்பாலானவர்களிடம் இதெல்லாம் இல்லை .பிரதமர் மோடியின் இலக்குகளை நிறைவேற்ற இன்றியமையாத கலாச்சாரத்தினை பெரும்பான்மையான மக்கள் இன்னும் உள்வாங்கவில்லை. விரைவாக முடிவெடுப்பது, விரைவாக செயல்படுத்துவது, தொந்தரவைக் குறைக்கும் பரிவர்த்தனைகள், பரிவர்த்தனைகளில் நேர்மை, பாரபட்சம் இல்லாமல் செயல்படுவது போன்ற கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும். இதுவே அனைத்து வளர்ந்த நாடுகளையும் இணைக்கும் பொதுவானதொரு அம்சமாக உள்ளது. இத்தகைய கலாச்சார பண்புகள் மட்டுமே வளர்ச்சியை இணைக்கும். கடந்த 1940களின் பிற்பகுதியில் பாரதம் மற்றும் சீனா என்பது ஒரே அளவுடையது தான். ஆனால் தற்போது பாரதத்தை விட சீனா ஆறு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு காரணம் கலாச்சாரம் என்பது உள்வாங்கப்பட்டது. கடந்த 2006ல் சீனாவின் ஷாங்காய் நகரில்  இன்ஃபோசிஸ் அலுவலகம் தொடங்க விண்ணப்பித்த போது, ஷாங்காய் நகர மேயர் அடுத்த நாளே 25 ஏக்கர் நிலத்தை அதற்காக ஒதுக்கினார். ஆனால் இந்த வேகம் பாரதத்தில் இல்லை. இங்கு கிழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை ஊழல் பரவியுள்ளது. பாரதத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் இங்கே இருந்து தான் தொழில் செய்ய விரும்புகின்றனர். அதற்கு ஏற்ப முடிவுகள் விரைவாக எடுக்கப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும். தேவை இல்லாத தொல்லைகளும், தடைகளும் இருக்கக்கூடாது” என்றார். மேலும், இளைஞர்கள், மூன்லைட்டிங், வீட்டில் இருந்தே பணி, வாரத்திற்கு மூன்று நாள் மட்டும்தான் பணி என்பது போன்ற மாய வலைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். சோம்பல்வேண்டாம், நெறி முறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துங்கள் என அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் போக்குவத்து விதிமீறலை சுட்டிக் காட்டிய அவர், டெல்லி நாட்டிலேயே மிகவும் ஒழுக்கம் இல்லாத ஒரு நகரம். டெல்லியில் அனைந்திந்திய மேலாண்மை நிகழ்வில் கலந்து கொள்ள வந்தபோது, விமான நிலையத்திலிருந்து வந்தபோது ஒரு போக்குவரத்து சிக்னலில் சிக்கிக்கொண்டேன். நிறைய கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் இருந்தன. பலரும் அலட்சியமாக போக்குவரத்து சிக்னலை மீறிச் செல்கின்றனர். அவர்களால் ஒரு சில நிமிடம் கூட காத்திருக்க முடியாது என்றால், அவர்கள் வேறு எதற்கும் காத்திருக்க மாட்டார்கள். இதுகுறித்த விழிப்புணர்வை நாம் ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். சின்னச் சின்ன இடங்களிலும் சரியான பாதையில் செல்வதற்குப் பழக்கப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் படிப்படியாக தாமாகவே விதிகளை மீறாமல் இருக்கும் பண்பு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.