கூட்டத்தொடரை கூட்ட மறுத்த ஆளுநர்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பிப்ரவரி 14 அன்று, “அரசியலமைப்பின் படி, ஆளுநருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் என்னை தேர்ந்தெடுத்த மூன்று கோடி பஞ்சாபிகளுக்கு மட்டுமே நாம் பதில் சொல்ல கடமைப்பட்டவன்” என்று ஒரு டுவிட்டர் பதிவிட்டிருந்தார். மேலும் இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் ஆளுநருக்கு அனுப்பினார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பகவந்த் மானுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மார்ச் 3ம் தேதி சட்டமன்றத்தை கூட்டும் விஷயத்தை புரோஹித் குறிப்பிட்டுள்ளார். “உங்கள் டுவீட் மற்றும் கடிதம் இரண்டும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமல்ல, மிகவும் இழிவானதாகவும் இருப்பதால் இந்தப் பிரச்சனையில் சட்ட ஆலோசனையைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். சட்ட ஆலோசனை பெற்ற பிறகே, உங்கள் கோரிக்கை மீது முடிவெடுப்பேன்,” என, கூறியுள்ளார். பஞ்சாப் அமைச்சரவை புதன்கிழமை கூடி, பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 11ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தது. மார்ச் 10ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருந்தது. பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 22ம் தேதி மீண்டும் தொடங்கி மார்ச் 24 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அமிர்தசரஸில் மார்ச் 15 முதல் 17 வரை மற்றும் 19 முதல் 20 வரை நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டின் இரண்டு சுற்றுகளுக்கு இடையில் இடைவேளையுடன் சட்டசபை அமர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று முதல்வர் மான் விளக்கினார். பஞ்சாப் அமைச்சரவை அனுமதித்த கால அட்டவணையின்படி, ஆளுநர் மார்ச் 3ம் தேதி சட்டசபையில் உரையாற்ற வேண்டும். ஆனால் இந்த பிரச்சனைக்குப் பிறகு, கூட்டத் தொடரை தொடங்க ஆளுநர் அனுமதிப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முன்னதாக ஆளுநர் பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்ததால், முதல்வர் மற்றும் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என அரசு வட்டாரங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக தனக்கு வந்துள்ள புகார்கள், போதைப்பொருள் நடமாட்டம், மற்றும் குற்றவாளிகள் கடுமையான குற்றங்களைத் திட்டமிட்டுச் செய்வதற்கு சிறைச்சாலைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட புகார்கள் குறித்து ஆளுநர் ஊடகங்களிடம் பேசியது குறித்து பகவந்த் மான் வருத்தம் தெரிவித்தார். பல்வேறு மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை மான் நியமித்ததை ஆட்சேபிப்பது முதல் பயிற்சிக்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் முதல்வர்களைத் தேர்ந்தெடுப்பது வரை கேள்வி எழுப்புவது வரை, கடந்த பல மாதங்களாக பஞ்சாப்பை ஆளும் ஆம் ஆத்மி அரசுடன் புரோகித் முரண்பட்டுள்ளார். இதனையடுத்தே மேற்கண்ட டுவிட்டர் பதிவையும் கடிதத்தையும் பகவந்த் மான் ஆளுநருக்கு அனுப்பியிருந்தார்.