கேரள தேவசம் போர்டின் கோயில் நிர்வாகக் குழுக்களில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை சேர்க்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மலபார் தேவசம் போர்டுக்கு உட்பட்ட பாலக்காடு ஒத்தப்பாலத்தில் உள்ள பூகூட்டுகாளிகாவு கோயிலின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஆளும் சி.பி.எம் கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர்களும் அக்கட்சியின் டி.ஒய்.எப்.ஐ அமைப்பின் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தத் தீர்ப்பை வழங்கியது. அவர்களின் நியமனங்களையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், வாரியத்தின் கீழ் உள்ள அனைத்து கோயில்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மலபார் தேவசம் போர்டு விதித்துள்ள நிபந்தனைகள், பணி நியமனம் செய்யும் போது மீறப்பட்டதாக நீதிமன்றம் கூறியுள்ளது. டி.ஒய்.எப்.ஐ ஒரு அரசியல் அமைப்பு அல்ல என்ற வாதத்தையும் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. தீவிர அரசியலில் ஈடுபடுபவர்களை கோயில்களின் பரம்பரை அறங்காவலர்களாக நியமிக்கக் கூடாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.