உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தைகளை கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்துக்கு மாற்ற முயன்றதற்காக முஸ்லிம் மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டார். பலராம்பூரில் உள்ள ஜார்வா காவல் நிலைய ஆய்வாளர் பவன் குமார் கன்னௌஜியா இதுகுறித்து கூறுகையில், கிருஷ்ணா என்பவர் அளித்த புகாரில், “உள்ளூர் முஸ்லிம் மதபோதகரான முகமது ஷாஹித், எனது மனைவி கரிஷ்மா மற்றும் அவர்களது நான்கு குழந்தைகளை தனியார் நிறுவனம் ஒன்றில் நிரந்தர வேலை வாங்கித் தருவதாகவும் வீடு வழங்குவதாகவும் கூறி கடத்திச் சென்றார். கரிஷ்மா மற்றும் அவரது குழந்தைகள் இஸ்லாத்தைத் தழுவினால் அதற்கு ஈடாக இதனை செய்வதாக ஷாஹித் கூறினார். கடத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, கரிஷ்மா தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்து வீடு திரும்பினார். எனினும், ஷாஹித் மீண்டும் எனது மனைவியை அணுகி அவரை மீண்டும் கவர முயன்றார்” என குற்றச்சாட்டு வைத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையறிந்த மௌலானா ஷாஹித் பல்ராம்பூரிலிருந்து தப்பிச் சென்றார். அவரை தேடி வந்தோம். டெல்லி, மும்பை பகுதிகளில் அவர் பதுங்கியிருந்தார். சமீபத்தில், ஷாஹித் தனது நோய்வாய்ப்பட்ட உறவினரை சந்திக்க பல்ராம்பூருக்கு வந்திருந்தார். இதையறிந்து அங்கு சென்று அவரை கைது செய்தோம் என கூறினார்.