பீகார் அரசியலில் பரபரப்பு

பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்த ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், அக்கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவை பிகாரின் வருங்கால தலைவர், வருங்கால முதல்வர் என்று கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த உபேந்திர குஷ்வாஹா, நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வந்தார். தேஜஸ்வி யாதவ் பிகார் முதல்வரானால் மாநிலத்தில் மீண்டும் காட்டாட்சி தொடங்கிவிடும் என எச்சரித்தார். லாலு பிரசாத் யாதவ் எவ்வாறு பிஹார் மாநிலத்தை அழித்தாரோ அதேபோன்று தேஜஸ்வி யாதவ் அழித்துவிடுவார் என்று விமர்சித்தார். கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் முற்றியது. அவர் எப்போது வேண்டுமானாலும் கட்சியை விட்டு விலகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ள உபேந்திர குஷ்வாஹா, ராஷ்ட்ரிய லோக் ஜனதா தள் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக கூறியுள்ளார். முன்னதாக, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திர குஷ்வாஹா, கடந்த 2021 மார்ச் மாதத்தில் தனது ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.