அறிவியல் மூலம் புதிய பாரதத்த கட்டமைக்கும் சூழலை ஆய்வாளர்களுக்கு வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த அமைச்சர், அங்கு ஆய்வு மாணவர்களிடையே உரையாற்றினார். முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற முழக்கத்தை நினைவுகூர்ந்த அமைச்சர், 20 ஆண்டுகளுக்கு முன் வரலாற்றுச் சிறப்புமிக்க பொக்ரான் உரையில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், பாரதத்துக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இத்துடன் ஜெய் விஞ்ஞான் என்பதையும் இணைத்துக் கொண்டார். தற்போது இந்த முழக்கங்களோடு பிரதமர் மோடி, ‘ஜெய் அனுஸந்தான்’ (ஆய்வு அமைப்புகள்) என்பதையும் இணைத்துக் கொண்டார். படைப்பாக்கம், ஆற்றல் மற்றும் நம்பிக்கையுள்ள சிந்தனைகளை ஏற்படுத்தும் நிலையில், புதிய பாரதத்தை கட்டமைக்கும் சூழலை ஆய்வாளர்களுக்கு வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. தற்போதுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி, எதிர்கால சவால்களை சந்திக்க பாரதம் தயாராகி வருகிறது. அறிவியல் அனைவருக்குமானது எனும் நிலையில், உள்ளூர் தேவைகளுக்கும், நிலைமைகளுக்கும் ஏற்ப தீர்வுகளை தொழில்நுட்பம் வழங்க வேண்டும். பொதுக் கொள்கை என்பது சட்டங்கள், முறைப்படுத்தும் அம்சங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றின் இணைப்பாகும். பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு பொதுக் கொள்கைகள் உருவாக்கப்பட்டு, அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் அனைவருக்கும் உயர்தரமான கல்வியை வழங்கி பாரதத்தை அறிவுசார் வல்லரசாக மாற்றுவதை தேசிய கல்விக்கொள்கை 2020 நோக்கமாக கொண்டுள்ளது. 21ம் நூற்றாண்டுக்கான புதிய பாதையையும், புதிய யுகத்தையும் துவங்குவதற்கான விதைகளை புதிய கல்விக்கொள்கை விதைக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். புதிய கல்விக்கொள்கையை சிறப்புடன் செயல்படுத்த அனைவரது ஒருங்கிணைந்த முயற்சி அவசியமாகும். 2030ம் ஆண்டுக்குள் அனைத்து உயர்கல்வி பாட வகுப்புகளும், இணையதளம் மூலம் நடத்தப்படும் வகையில் புதிய கல்விக்கொள்கை டிஜிட்டல் கல்வி முறைக்கு ஊக்கமளிக்கிறது” என கூறினார்.