சி.பி.ஐ விசாரிக்க கோரிக்கை

அன்பு ஜோதி இல்லம் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். இங்கு பாலியல் அத்துமீறல்கள், துன்புறுத்துதல், முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சமீபத்தில் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த முதியவர் ஜபருல்லாவை காணவில்லை என அவரது மகன் புகார் கொடுத்தார். ஆனால், காப்பகத்தினர் இதற்கு சரியாக பதில் கூறவில்லை. இதனையடுத்து தனது தந்தையை மீட்டுத் தரக்கோரி அவரது மகன் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இவ்வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான், அன்பு ஜோதி இல்லத்தில் இருந்தவர்கள் உடலுறுப்புகளுக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளதகவும் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அமித்ஷாவுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சூழலில், பல்வேறு தரப்பினர் கோரிக்கை மற்றும் அழுத்தத்தை அடுத்து இந்த வழக்கை சி.பி சி.ஐ.டிக்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.