குழந்தை திருமணத்துக்கு எதிரான நடவடிக்கை

பாரதத்தில் இன்னும் தொடரும் சில பிரச்சனைகளில் குழந்தை திருமணமும் ஒன்று. குறிப்பாக பல மாநிலங்களில் இந்த பிரச்சனை இருந்தாலும் வடகிழக்கு மாநிலமான அசாமில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதனால், சிறுமிகள் சிறு வயதில் கர்ப்பம் தரித்தல், அதனால் ஏற்படும் தாய் சேய் மரணங்கள் போன்றவையும் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து கடந்த ஜனவரி 23ம் தேதி நடைபெற்ற அசாம் அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. குழந்தை திருமணத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  கடந்த 2ம் தேதி இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “அசாமில் வரும் 2026ம் ஆண்டுக்குள் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டுள்ளோம். 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். 14 வயது முதல் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தோர் மீது குழந்தை திருமணதடை சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற குழந்தை திருமணங்கள் குறித்த விவரங்களை திரட்டிய அசாம் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் இறங்கினர். ஒரே வாரத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக 4,135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 2,763 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதுகுறித்து பேசிய அசாம் டி.ஜி.பி ஞானேந்திர பிரதாப் சிங், “குழந்தை திருமணம் ஒரு சமூக தீமை. கடந்த 2022ல் மட்டும் அசாமில் 6.2 லட்சம் சிறுமிகள் கருவுற்று உள்ளனர். ஒரு குழந்தையே மற்றொரு குழந்தையை பெற்றெடுப்பதால் பேறுகால உயிரிழப்பு அதிகரிக்கிறது. மேலும், ஊட்டச்சத்து குறைபாடுகள், நோய்வாய்ப்படுதல் போன்றவையும் அதிகரிக்கின்றன. எனவே எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இளைஞர்களை கைது செய்வதால் அவர்களின் மனைவிகள் (சிறுமிகள்) எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஆட்சியர்கள், சமூக நீதித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.