புதிய ஆளுநர்கள் நியமனம்

பதிமூன்று மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தமிழக பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயலாளருமான சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், கடந்த 1998 மற்றும் 1999ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் இருமுறை வென்று மக்களவை உறுப்பினராக இருந்தவர். கடந்த 2016 முதல் 2019ம் ஆண்டு வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்துள்ளார். தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது ஆளுநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சி.பி. ராதாகிருஷ்ணன், “தமிழகத்திற்கு மீண்டும் ஒரு ஆளுநரை குடியரசு தலைவரும் பிரதமரும் கொடுத்துள்ளனர். இது தமிழ் மக்களின் மீதும், பாரம்பரியத்தின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் எத்தகைய அன்பும் பாசமும் வைத்துள்ளார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது. பழங்குடியின, பட்டியலின, ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு என்னென்ன வழிகளில் ‌செயல்பட முடியுமோ அதற்கேற்ப பணியாற்றுவேன். இதனை எனக்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கவில்லை. தமிழினத்திற்குக் கிடைத்த பெருமையாகவே பார்க்கிறேன், பிரதமர் மோடிக்கும் குடியரசு தலைவருக்கும் தமிழ் மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன்‌” என்று கூறினார்.தமிழக பா.ஜ.கவின் மூத்த தலைவர்களான இல. கணேசன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் தமிழகத்தில் இருந்து ஆளுநராக ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த பட்டியலில் சில ஆளுநர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மற்றும் லடாக் துணைநிலை ஆளுநர் ஆர்.கே. மாத்தூர் ஆகியோரின் ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

அவ்வகையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நசீர் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். லடாக் துணைநிலை ஆளுநர் ஆர்.கே.மாத்தூருக்கு பதிலாக அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிகேடியர் பி.டி மிஸ்ரா (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார். துணைநிலை ஆளுநர் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக் அருணாச்சல பிரதேசத்தின் ஆளுநராகவும் சிக்கிம் மாநில ஆளுநராக லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யாவும் ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக சிவ பிரதாப் சுக்லாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநில ஆளுநராக இருந்த பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அசாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சத்தீஸ்கர் மாநில ஆளுநராக உள்ள சுஸ்ரீ அனுசுயா உக்யே மணிப்பூர் ஆளுநராக பதவியேற்க உள்ளார். மணிப்பூர் ஆளுநராக உள்ள இல. கணேசன் இனி நாகாலாந்து ஆளுநராக இருப்பார். பீகார் ஆளுநராக இருந்த பாகு சௌஹான் மேகாலயா ஆளுநராக பொறுப்பு வகிப்பார். ஹிமாச்சல பிரதேச ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பீகார் ஆளுநராக பதவியேற்க உள்ளார். ஜார்கண்ட் மாநில ஆளுநரான ரமேஷ் பய்ஸ், மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.