எஸ்.டி.பி.ஐ மீது என்.ஐ.ஏ பார்வை

மத அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) முடக்கம், அதன் முக்கியத் தலைவர்கள் கைது மற்றும் விசாரணைக்குப் பிறகு, இப்போது தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐ..ஏவின் பார்வை, பி.எப்.ஐ அமைப்பின் அரசியல் முகமாகக் கருதப்படும் சோஷியல் டெமாக்ரடிக் பிரண்ட் ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சித் தலைவர்கள் பக்கம் திரும்பியுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராய் அரக்கலிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.டி.பி.ஐ கேரள மாநில பொதுச் செயலாளர் அஜ்மல் இஸ்மாயிலிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் மாநிலச் செயலக உறுப்பினர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் தொடர்பாக ராய் அரக்கலிடம் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் சில முக்கிய எஸ்.டி.பி.ஐ தலைவர்களுக்கு விசாரணைக்காக நோட்டீசை என்.ஐ.ஏ அனுப்பியுள்ளது. பி.எப்.ஐ முடக்கப்பட்ட பிறகு சமீபத்தில் அதன் அரசியக் பிரிவான எஸ்.டி.பி.ஐக்கு இடம்பெயர்ந்த ஏராளமான முன்னாள் பி.எப்.ஐ நபர்கள் மீதும் என்.ஐ.ஏ கவனம் செலுத்தி வருகிறது. எஸ்.டி.பி.ஐ, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி என்பதல் மத்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே மத்திய அரசு அதனை தடை செய்ய முடியும். பா.ஜ.க கேரள மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் இதுபற்றி கூறுகையில், பி.எப்.ஐ மீதான தடைக்குப் பிறகு, அதன் ஆட்கள் முஸ்லீம் யூத் லீக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு (டி.ஒய்.எப்.ஐ), மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர் அமைப்பில் இணைந்துள்ளனர். ஆளும் சி.பி.எம் தலைமையிலான இடதுசாரிகள் ஜனநாயக முன்னணியும், அதன் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை பெற எதையும் விலையையும் கொடுக்க தயாராக உள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவித்தார்.