பா.ஜ.க தலைவர் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டம் அவப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நீல்கந்த் கேகம். இவர், அப்பகுதியின் மண்டல பா.ஜ.க தலைவராக இருந்து வந்தார். இவர், தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக தனது குடும்பத்துடன் சென்றார். திருமண நிகழ்ச்சியில் திடீரென அங்கு வந்த மூன்று இடதுசாரி மாவோயிஸ்டு பயங்கரவாதிகள், நீல்கந்த் கேகத்தை அங்கேயே சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் படுகாயமடைந்தாவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், நீல்கந்த் கேகமின் உடலை மீட்டு உடற்கூராவிற்காக அனுப்பினர். இதுகுறித்த விசாரணையை துவங்கியுள்ளதுடன் இதில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர். இதுகுறித்து பேசிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சந்திரகாந்த் கவர்னா, “எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, 150க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் கிராமத்திற்கு தாக்குதல் நடத்த வந்துள்ளனர். ஆனால் மூன்று பேர் மட்டுமே இந்த திருமண வீட்டிற்கு வந்து அவரைத் தாக்கியுள்ளனர். மாவோயிஸ்டுகள் அனைவரும் சாதாரண உடையில் இருந்தனர். இறந்த பா.ஜ.க தலைவருக்கு மாவோயிஸ்டுகள் ஏற்கனவே இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்த கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.” என கூறினார்.