ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002 குஜராத் கலவரம் தொடர்பான சர்ச்சைக்குரிய பி.பி.சி ஆவணப்படத்தை திரையிடமுயன்ற பாரதிய ராஷ்டிர சமிதி மாணவர் பிரிவைச் சேர்ந்தவ மாணவர்களை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்தனர். (முன்பு தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) என அழைக்கப்பட்டு சமீபத்தில் பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) என பெயர் மாற்றம் செய்யப்பட்ட தெலுங்கானா மாநில ஆளும் கட்சியை சர்ந்த மாணவர் அமைப்பு இது). நமது தேசத்தில் தேவையற்ற அரசியல் பதற்றத்தை கிளப்பி சிலர் ஆதாயம் பெறும் வகையில் பி.பி.சி திட்டமிட்டு தயாரித்த இந்த ஆவணப் படத்தை மத்திய அரசு ஏற்கனவே தடை செய்துள்ளது. இந்த ஆவணப் படத்தை காவல்துறையினர் திரையிட விடாமல் தடுத்து நிறுத்தியதால் பல்கலைக் கழக மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. முன்னதாக, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு (ஜேஎன்யு) மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகங்கள் உட்பட பல பல்கலைக் கழகங்களில் சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை திரையிட முயற்சித்தன. தமிழகத்திலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறையில் பேராசிரியர் சாம்வேல் ஆசிர்ராஜ், இடதுசாரிகள் ஆதரவு இந்திய மாணவர் சங்கமான எஸ்.எப்.ஐ இதனை திரையிட்டு மாணவர்களிடையே சமூக பதற்றத்தை ஏற்படுத்த முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.