கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், கோவையில் இருந்து பழனிக்கு தனது பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த பாதயாத்திரையை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். தான் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பெற்ற வெற்றிக்காகவும், பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்களின் நலனுக்கான வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பாதயாத்திரையாகச் செல்வதாக வானதி சினிவாசன் தெரிவித்துள்ளார். மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் பாதயாத்திரை தொடக்க நிகழ்வில் பங்கேற்றனர். சுமார் 50 பேருடன் கோவையில் இருந்து இந்த பாதயாத்திரையைத் தொடங்கினார் வானதி சீனிவாசன். தொடர்ந்து செல்லும் வழியில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் பாதயாத்திரையில் இணைந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. கோவையில் இருந்து புறப்பட்டுள்ள இந்த பாதயாத்திரை பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியாகச் சென்று பிப்ரவரி 2ம் தேதி இரவு பழனியை அடைகிறது. பிப்ரவரி 3ம் தேதி காலை பழனிமலை முருகனை தரிசிக்கும் வானதி சீனிவாசன் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் அன்றே கோவைக்குத் திரும்புகின்றனர். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில், “இன்று, தமிழக பா.ஜ.க மூத்த தலைவரும், பா.ஜ.க மகளிர் அணியின் தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் அக்கா அவர்கள், மேற்கோள்ளும் தைப்பூச பழனி யாத்திரையை, கோவை ஈச்சனாரி வினாயகர் ஆலயத்தில் தொடங்கி வைத்தோம். அவர்கள் பாதயாத்திரை பயணம், சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.