ஹுரியத் மாநாட்டு அலுவலகத்துக்கு சீல்

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) விதிகளின் கீழ், ஸ்ரீநகரின் ராஜ்பாக் பகுதியில் உள்ள அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டின் (ஏ.பி.எஸ்.சி) தலைமையகத்திற்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) பூட்டி சீல் வைத்துள்ளது. இஸ்லாமிய ஜிகாதிகளை ஒழிப்பதில் இது மைல்கல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஹுரியத் மாநாட்டு கட்சி காஷ்மீர் பகுதியில் போராட்டங்கள், கல் வீச்சு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நடவடிக்கைகளுக்கு வியூகம் வகுப்பதற்காக கூட்டங்களை நடத்த பயன்படுத்தப்பட்டது. மேலும் இதன் உறுப்பினர்கள், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மற்றும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்து ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஹுரியத் மாநாடு என்பது 26 தேசப் பிரிவினைவாத அமைப்புகளின் கூட்டமைப்பாக 1993ல் உருவாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. பிரிவினைவாதக் குழுக்களுக்கு எதிரான அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2019 முதல் இதன் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.