பா.ஜ.கவில் இணைந்த தலைவர்கள்

திரிபுராவில் இந்த ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், திரிபுராவில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக, திரிபுராவின் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சுபால் பௌமிக் மற்றும் இடதுசாரி கட்சியான சி.பி.ஐ(எம்) தலைவர் மொபோஷர் அலி ஆகியோர் தேசியத் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.கவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் முதல்வர் மாணிக் சாஹாவும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் சாஹா, “கட்சியை வலுப்படுத்துவோம். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ.க தலைமையின் காரணமாக, எங்கள் மீது மக்கள் அதிக ஆதரவும் நம்பிக்கையும் வைத்துள்ளனர். பா.ஜ.க நிச்சயமாக மீண்டும் ஆட்சியமைக்கும்” என்று கூறினார். கட்சியில் இணைந்த சுபால் பௌமிக் உரையாற்றுகையில், கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சியைப் பாராட்டினார், மேலும் “பிரதமர் இப்பகுதியை சர்வதேச அரங்கிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, திரிபுரா அங்கீகரிக்கப்பட்டு வளர்ச்சி அடைந்துள்ளது. திரிபுரா போன்ற சிறிய மாநிலத்தில் கூட 6 தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. திரிபுராவுக்கு என்று தற்போது சர்வதேச விமான நிலையமும் உள்ளது. பிரதமர் மோடி வடகிழக்கை சர்வதேச மேடைக்கு கொண்டு சென்றுள்ளார். திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.