சர்ச்சைக்குரிய பி.பி.சி ஆவண படம்

இங்கிலாந்து அரசு ஊடகமான பி.பி.சி, கடந்த 17ம் தேதி குஜராத் கலவரம் தொடர்பாக ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியாமோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து பல எதிர்மறையான கருத்துகளை பி.பி.சி வெளியிட்டது. யூடியூபில் வெளியான இந்த ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அர்சின் எதிர்ப்பையடுத்து யூடியூப் நிறுவனமும் இந்த ஆவண படத்தை தனது தளத்தில் இருந்து நீக்கியது.இந்த ஆவண படத்தின் 2ம் பாகம் வரும் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “பாரதத்துக்கு எதிராக ஆவணப் படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பி.பி.சி வெளியிட்டுள்ள ஆவண படத்தில் அதன் பாரபட்சமான மனப்பான்மை, காலனி ஆதிக்கத்துவ மனப்பான்மை போன்றவை அப்பட்டமாக வெளிப்படுகிறது. இந்த ஆவண படம் கண்ணியமானது இல்லை” என்றார். இதனிடையே, பி.பி.சி ஆவண படம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட எம்.பி இம்ரான் ஹூசைன் சர்ச்சையை எழுப்பினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், “குஜராத் கலவரம் தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்தபகுதியில் அநீதி நடந்தாலும் அதை தட்டிக் கேட்போம். ஆனால் ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது” என்றார். பி.பி.சி எப்போதுமே பாரதத்துக்கு எதிராகவும் பா.ஜ.கவுக்கு எதிராகவுமே செயல்பட்டு வருகிறது, கொரோனா காலத்தில் கூட தேவையற்ற பல சர்ச்சைகளை எழுப்பியது. பல செய்திகளை திரித்து வெளியிட்ட சம்பவங்களும் நடந்துள்ளது என சமூக ஊடக பயனர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.