கர்நாடக மாநிலம் கலபுர்கியில் நடைபெற்ற லம்பானி (பஞ்சாரா நாடோடி சமூக மக்கள்) குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி லம்பானி மக்களின் பாரம்பரிய உடையை அணிந்து பங்கேற்றார். லம்பானிகளின் பாரம்பரிய நடனத்தையும் கண்டு களித்தார். கர்நாடக மாநிலத்தின் யாதகிரி, கலபுர்கி, ரெய்ச்சூர், பீதர், விஜயாப்பூர் ஆகிய 5 மாவட்டங்ளை சேர்ந்த களில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லம்பானி குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், “லம்பானி சமூக வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். இதற்கக லம்பானி சமூகத்தினர் நீண்ட போராட்டத்தை நடத்தி வந்தனர். அதன் விளைவாகவே இப்போது 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லம்பானி குடும்பங்கள் சொந்தமாக வீட்டை பெறுகிறார்கள். இதனால் லம்பானி சமூகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். 1993ம் ஆண்டிலேயே லம்பானி மக்களுக்கு வீட்டு பட்டா வழங்குமாறு பரிந்துரை வழங்கப்பட்டது. ஆனால் அப்போது ஆட்சி செய்தவர்கள் லம்பானிகளை வாக்கு வங்கியாக பயன்படுத்தினார்களே தவிர நிலப் பட்டா வழங்கவில்லை. குஜராத்திலும் பஞ்சாரா சமூகத்தினர் ஏராளமானோர் வசிக்கின்றனர். அவர்களில் ஒருவனாகவே என்னை கருதுகிறேன்” என்று கூறினார். மேலும், கர்நாடக மாநிலத்தில் கல்யாண் கர்நாடக பகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. முந்தைய அரசுகள் யாதகிரி, கலபுர்கி, பெல்லாரி, பீஜப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் வளர்ச்சிக்காக பாடுபடவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தோம். இந்த மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளோம். முன்பு ஆட்சியில் இருந்த கட்சிகள் வாக்கு வங்கி அரசியலில் கவனம் செலுத்தின. இதனால் வளர்ச்சி திட்டங்கள் முடங்கின. எங்களுக்கு வாக்கு வங்கி அரசியல் முக்கியம் இல்லை. வளர்ச்சி அரசியலே முக்கியம். நாட்டின் வளர்ச்சிக்கு நீர் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அடுத்த 25 ஆண்டுகள் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், நாட்டுக்கும் பொற்காலமாக அமையப் போகிறது. இந்த காலகட்டத்தில் நாம் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவோம். கர்நாடகாவில் இரட்டை எஞ்சின் அரசு நடப்பதால் மக்களுக்கு இரட்டை நன்மை கிடைக்கிறது. கர்நாடகா வேகமாக முன்னேறி வருகிறது” என தெரிவித்தார்.