லேஆப்ஸ்.எப்.ஒய்.ஐ (Layoffs.fyi) நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளவிலான தரவுகளின்படி 2022ம் ஆண்டில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. தற்போது ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் உலகளவில் சுமார் 91 நிறுவனங்கள் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. 2023ம் ஆண்டில் உலகளவிலான டெக் நிறுவனங்கள் தினமும் 1,600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றன. பொருளாதார மந்தநிலை உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் காரணமாக அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்துத்துறை நிறுவனங்களும் தங்களது செலவுகளைக் குறைந்து நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் வளர்ச்சி பாதையை உறுதி செய்யப் பணிநீக்க நடவடிக்கையை தற்போது கையில் எடுத்துள்ளன. முக்கியமாக, டெக் துறைக்கு இது மிகவும் மோசமான நாட்களாகப் பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. சமீபத்தில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வில், பாரதத்தில் உள்ள நிறுவனங்களின் சுமார் 93 சதவீத நிர்வாக அதிகாரிகள், 2023ம் ஆண்டில் தங்களது முக்கியப் பணி செலவுகளைக் குறைப்பதுதான் எனத் தெரிவித்துள்ளனர். எனினும், உலகில் பிற நாடுகளை ஒப்பிடும் போது பாரத நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட டெக் ஊழியர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பாரதத்தில் உள்ள நிறுவனங்களின் ஊழியர்கள் 2023ம் ஆண்டில் 15 முதல் 30 சதவீதம் வரையிலான வருடாந்திர சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். ஆசியாவிலேயே அதிகப்படியான சம்பள உயர்வை பாரத நிறுவனங்கள் மட்டுமே அளிக்கும். பாரதத்தில் உள்ள பல பெருநிறுவனங்கள், 2ம் கட்ட மற்றும் 3ம் கட்ட நகரங்களிலும் தங்களது அலுவலகத்தை அமைத்துவரும் வேளையில் சிறுநகரங்களின் சராசரி சம்பளமும் அதிகரித்துள்ளது என்ற கணிப்பு வெளியாகியுள்ளது நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.