கடந்த 2014ம் ஆண்டு மே 26ம் தேதி பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். தொடர்ந்து 8 ஆண்டுகளாக பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கான மருத்துவ செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், தன்னுடைய மருத்துவச் செலவு முழுவதையும் பிரதமரே ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதற்காக, ஒரு ரூபாய்கூட அரசு செலவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா, ஆரோக்கியமான பாரதம் இயக்கம் மூலம் மக்களுக்கு செய்தியை அளிப்பதோடு மட்டுமன்றி, தானே உதாரணமாக இருந்து ஆரோக்கியமாக இருப்பது குறித்து 135 கோடி பாரத மக்களையும் மோடி ஊக்குவித்து வருகிறார் என தெரிவித்துள்ளார். வரிசெலுத்துவோரின் பணம் எதுவும் பிரதமர் அலுவலகத்தின் தனிப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என்றும், இது ஆளுமை மீதான நமது நம்பிக்கையை அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘அரசு பணத்தில் குடும்பத்துடன் உல்லாச பயணம், தன்னுடைய அரசுமுறை பயணத்தில் கூட குடும்பத்தினர் மட்டுமின்றி சொந்தபந்தங்கள், ஆடிட்டர், அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் என ஒரு பெருங்கூட்டத்தையே அழைத்துக்கொண்டு செல்வது என அந்த காலத்தில் இருந்து இப்போதுவரை காங்கிரஸ், திராவிட, இடதுசாரி ஆட்சியாளர்களை பார்த்து பழகிய மக்களுக்கு அவ்வப்போது காமராஜர், அப்துல்கலாம், வாஜ்பாய் என சில உண்மையான தேசபக்தர்கள்தோன்றி நம்பிக்கை அளித்து வந்தனர். அவ்வகையில், தற்போது பிரதமர் மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள், யோகி ஆதித்யநாத் போன்ற பா.ஜ.க முதல்வர்கள், தலைவர்கள் எல்லோரும் தற்போது ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்டி வருகின்றனர்’ என சமூக ஊடகங்களில் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.