ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து போராட்டம்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜெயின் சமூகத்தினரின் முக்கிய புனித தலமான ஸ்ரீ சம்மேத் ஷிகர்ஜியை, சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான ஜார்க்கண்ட் அரசின் முடிவுக்கு அந்த சமூகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீ சம்மேத் ஷிகர்ஜியை சுற்றுலா மையமாக அறிவித்து மேம்படுத்தும் ஜார்க்கண்ட் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஜெயின் சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பல நகரங்களில் ஜெயின் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதன்படி சென்னையிலும் நேற்று ஆயிரக்கணக்கான ஜெயின் சமூக மக்கள் கலந்து கொண்ட கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிந்தாதிரிப்பேட்டை பாலம் அருகில் உள்ள ஜெயின் கோயிலில் தொடங்கி ராஜரத்தினம் மைதானம் வரை கண்டனப் பேரணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, இந்த கோரிக்கையை வலியுறுத்தி முனி சுக்யே சாகர் மகராஜ் என்ற துறவி 10 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கடந்த 3ம் தேதி உயிர் துறந்தார். இதேபோல நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் முனி சமர்த் சாகர் மகராஜ் என்ற துறவியும் இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். இதனிடையே, பராஸ்நாத் மலைகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்த மத்திய அரசு ஜார்க்கண்ட் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், ஜெயின் சமூகத்தின் பல்வேறு பிரதிநிதிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தி, முழுப் பிரச்சினையும், சாத்தியமான தீர்வும் குறித்து விவாதித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, பராஸ்நாத் வனவிலங்கு சரணாலயத்தின் தொடர்புடைய விதிகள் மேலாண்மைத் திட்டத்தை, குறிப்பாக தாவரங்கள் அல்லது விலங்கினங்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தடைசெய்யும் வகையில், அங்கு அங்கு செல்ல பிராணிகளுடன் வருவது, உரத்த இசையை வாசித்தல், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துதல், புனித நினைவுச்சின்னங்கள், ஏரிகள், பாறைகள், குகைகள் மற்றும் புனித இடங்கள் போன்ற மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கெடுக்கும் சூழல்கள், மதுபானம், போதைப்பொருட்கள் மற்றும் பிற போதைப்பொருட்களின் விற்பனை, பராஸ்நாத் மலையில் அங்கீகரிக்கப்படாத முகாம் மற்றும் மலையேற்றம் போன்ற அனைத்தையும் தடை செய்ய ஜார்க்கண்ட் அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.