சிறுபான்மையினர் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை ஹிந்துக்கள் அதிகமாக வசிக்கும் சிந்து மாகாணத்தில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கற்பழிப்பு, கட்டாய மதமாற்றம், ஹிந்து ஆண்கள் கொலை செய்யப்படுவது, பொய்யான இறை நிந்தனை வழக்குகளைப் போட்டு ஹிந்து மக்களை துன்புறுத்துதல் போன்ற கொடூரங்கள் அங்கு சமீப காலமாக அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதற்கு அங்குள்ள அரசியல்வாதிகள், காவல்துறையினர், ராணுவத்தினரும் உடந்தையாக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பல மனித உரிமை அமைப்புகளால் முன்வைக்கப்படுகிறது. தற்போது இதுபோன்ற மற்றொரு வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ‘தி ரைஸ் நியூஸ்’ பத்திரிகை செய்தியின்படி, சிந்துவின் உமர்கோட் மாவட்டத்தில் உள்ள குந்தி என்ற சிறிய நகரத்தில் வசிக்கும் லாலு என்ற ஹிந்து நபரின் திருமணமான தங்கை லாலியை கடத்துவதற்காக, அங்கு பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அப்துல்லா கோசோ உட்பட சிலர் லாலுவின் வீட்டிற்குள் புகுந்தனர். லாலு, தனது தங்கையை காப்பாற்ற அப்துல்லாவின் கும்பலுடன் எதிர்த்துப் போராடினார். அவர்கள் லாலுவை கொடூரமாகத் தாக்கிவிட்டு அவரது தங்கையை கடத்திச் சென்றனர். இதுவரை லாலி இருக்கும் இடம் குறித்து தெரியவில்லை. கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட லாலு, ஜனவரி 1 அன்று அவர் மரணம் அடைந்தார். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்து விட்டனர். இதனையடுத்து புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் நீதி கோரியும் அங்குள்ள ஹிந்துக்கள் கொட்டும் பனியில் சுமார் 18 மணி நேரம் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்து போராட்டம் நடத்தினர். இறுதியாக ஜனவரி 3ம் தேதி நபிசார் சாலை காவல் நிலையத்தில் இந்த விவகாரத்தில் கொலை மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்துல்லா, லாலியை கடத்த முயற்சிப்பது இது முதல் முறையல்ல. கடந்த நவம்பரில், அப்துல்லா லாலியை தனது வீட்டிற்கு கடத்திச்சென்று அங்கேயே அடைத்து வைத்திருந்தார். அவர் மீது காவல் நிலையத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்ததை அறிந்ததும் விடுவித்தார். கொல்லப்பட்ட லாலுவின் வீடியோ சிந்தி ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் பகிரப்பட்டது. லாலுவுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர்.