அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “கலிபோர்னியாவைச் சேர்ந்த மேயர் எரிக் எம் கார்செட்டி, பாரதத்துக்கான அமெரிக்காவின் தூதராக செயல்படுவார்” என்று அறிவித்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர், “அமெரிக்கா பாரதத்திற்கான தூதரக அதிகாரிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது ஒரு முன்னுரிமை செயல்பாடு என்று உங்களுக்குத் தெரியும். எங்களுக்கு பாரதத்திடம் மிக முக்கிய உறவு உள்ளது. நாங்கள் உண்மையிலேயே அதைமதிக்கிறோம். மேயர் கார்செட்டி இந்த முக்கிய பாத்திரத்தில் பணியாற்ற தகுதியானவர்” என்று கூறினார். ஜூலை 2013 முதல் டிசம்பர் 2022 வரை லாஸ் ஏஞ்சல்ஸின் 42வது மேயராகப் பணியாற்றிய கார்செட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நெருங்கிய உதவியாளர் ஆவார். பாரதம், தற்போது ஜி20 அமைப்புக்கு தலைமை தாங்குகிறது. இதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையே ஏராளமான இதூதரக ரீதியிலான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன, இதற்காக ஜோ பைடன் நிர்வாகம் அதன் நம்பிக்கையான தூதரை டெல்லியில் விரைவில் பணியமர்த்த விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கார்செட்டியின் முன்னாள் மூத்த அரசியல் உதவியாளர்களில் ஒருவரால் கூறப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் குற்றச்சட்டுகள் காரணமாகவும் செல்வாக்கு மிக்க செனட்டர் சக் கிராஸ்லி போன்றோரின் எதிர்ப்பு காரணமாகவும்ஜூலை 2021ல் பாரதத்துக்கான அமெரிக்க தூதராக அறிவிக்கப்பட்ட கார்செட்டியின் நியமனம் இதுவரை இழுபறி நிலையில் இருந்தது. கார்செட்டி அந்த குற்றச்சாட்டுகளை பலமுறை மறுத்துள்ளார்.