கனியின் இனிமையும் வாசனையும் காற்றில் பரவ…
‘முதுமை’ என்பது வயது சார்ந்தோ, இயலாமை சார்ந்தோ இல்லை. அது எண்ணம் சார்ந்தது என்றே தோன்றுகிறது.
கண் பார்வை மங்குவது – கண் புரை நோய் என்ற மிக அதிகமாகக் காணப்படும் குறைபாடு. இதனால் தங்கள் செயல்பாடுகளை, நகர்தலை, பயணத்தை மற்றவர்களோடு தொடர்பு கொள்ளுதலைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். அதனால் வெறுமை தட்டி, நினைவு பிறழ்ந்து, தனிமைப்படுத்தப்பட்டு, இறக்க நேரிடுகிறது.
* இளமையில், நடுத்தர வயதில், என்ன ஆசையாகச் செய்தோமோ அதன் தொடர்ச்சியாகத் தானே இப்போது முதுமையில் செய்ய முடியும்? வாசிக்கப் பிடிக்கும் கதை புத்தகம் வாசித்த நீங்கள், ராமாயணம், மகாபாரதம், கீதை என வாசிக்கலாம்.
* கோயில் என்பது பக்தி சிரத்தையுடன் நம் மனதைப் பேணும் ஒரு முக்கிய இடம். தோட்டம் போடுவதில் ஆர்வம் எனில், நந்தவனங்கள் அமைக்க உதவி புரியலாம். கோலம் போடுவது பிடிக்கும் எனில், கோயிலில் தெளித்துக் கோலம் போடும் புண்ணிய வேலையைச் செய்யலாம்.
* சிறு வயதில், ஆர்கனைஸிங் வேலைகளில் விருப்பம் என்றால், யாத்ரா செல்ல, அருகில் உள்ள கோயில்களுக்கு வயதானவர்கள் சேர்ந்து செல்ல ஏற்பாடு செய்யலாம்.
* தொண்டு செய்வதில் இஷ்டம் என்றால், ஏழை எளியோருக்கு, சேவை செய்யலாம்.
* விதை, வித்துகளை சேகரித்து, வீட்டிற்கு வரும் இல்லத்தரசிகளிடம் கொடுத்து தோட்டத்தில் ஊன்றச் செய்யலாம். பிற்காலத்தில் உங்கள் புகழ் பாடும் அவர்களின் தோட்டம்.
* உங்களுக்குப் பிடித்த சம வயதினரையோ, சிறு வயதினரையோ, விருந்திற்குக் கூப்பிடுங்களேன்! எப்போது பார்த்தாலும் அவர்கள் தான் நமக்கு உணவு பரிமாற வேண்டுமா?
* வரப்போகும் பேத்தி, பேரன்களுக்காக, அறைகளை மாற்றி அமைக்கலாம்.
* கீதை, திருவாசகம், திருக்குறள், பஜனை என வாரத்தில் இரு நாட்கள் தெருக் இலவச வகுப்பு நடத்தலாம்.
* தமிழ் இலக்கணம், ஆங்கிலம், கணிதம் போன்ற, அவரவர்களுக்கு தெரிந்த பாடங்களை மாணவர்களுக்குச் சொல்லித் தரலாம்.
* ஜூஸ், சூப், பாரம்பரிய சமையல் என மதிய வேளைகளில் வகுப்பு நடத்த, மனசு லேசாகும்.
* இள வயதினரிடம் இருந்து ஸ்கைப், வாட்ஸ்-ஆப், வைஃபை, என சகலமும் கற்றுக் கொண்டு, பிளாக் ஆரம்பித்து அசத்தலாம்.
* நடுத்தர வயதில் நேரம் கிடைக்காத – புதிர்கள், குறுக்கெழுத்து, நண்பர்களுடன் அரட்டை, பூச்செடிகள் வளர்த்தல், கை வேலை என எதையும் துணிச்சலாகச் செய்யத் தொடங்குங்கள்.
* காலை நடைப் பயிற்சியை அவசியம் செய்யுங்கள்.
* அருகில் உள்ள மருந்துக் கடை, மளிகை சாமான் கடை, ஹோட்டல், மருத்துவர், பூக்கடை, பேப்பர் பையன், பால் போடுபவர், குடிநீர் சப்ளை போன்ற அத்யாவசிய டோர் டெலிவரி, மற்றும் டாக்ஸி தொடர்பு எண்களைக் குறித்துவைத்து, தேவைப்படுபவர்களுக்குத் தரலாம்.
வயோதிகப் பருவம் உங்களுக்கானது. அசத்துங்கள்!