சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “பா.ஜ.கவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகியதால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன். இதுதான் என்னுடைய வாடிக்கை. எங்கு சென்றாலும் அவர்கள் நன்றாக இருக்கட்டும். வாழ்க்கையில் நினைத்தது எல்லாம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். விலகுபவர்கள் யாரும் என்னை புகழ்ந்து விட்டுச் செல்ல வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. என் மீது அனைவரும் தான் விமர்சனம் வைக்கிறார்கள். அதற்கான பதில் என்னுடைய மௌனம் தான். மகளிர் அதிக அளவில் பா.ஜ.கவை நோக்கி வருகிறார்கள். யாரோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என கட்சியை விட்டு போகிறார்கள் என்றால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என திராவிட கட்சிகள் கூறி வருவதற்கும் உண்மை நிலைக்கும் புதுக்கோட்டையில் உள்ள இறையூரில் நடைபெற்ற சம்பவமே சாட்சி. தமிழகத்தில் தான் அதிக அளவில் பட்டியலின பஞ்சாயத்துத் தலைவர்கள் கொடியேற்றகூட முடியாத நிலை நிலவுகிறது. இதனை முதல்வர் கவனிக்கிறாரா, என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது தமிழக மக்களின் கேள்வியாகும். திராவிட மாடல் ஆட்சியில், ஆர்.கே நகர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ, மாநகராட்சி ஊழியர் ஒருவருக்கு அழுத்தம் கொடுத்து வெறும் கைகளால் கழிவுநீர் சாக்கடையை சுத்தம் செய்ய வைத்திருக்கிறார். அந்த எம்.எல்.ஏ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நடைபெறும் விஷயங்கள் மக்களிடம் கேலி செய்யப்படும் விஷயமாக உள்ளது. தேசத்தை பிரிக்கும் வகையில் அந்த யாத்திரை உள்ளது. அவருடன் யாத்திரையில் கலந்துகொள்பவர்கள் குறித்து பல சர்ச்சைகள் உள்ளன. தி.மு.க அமைச்சர் தொடர்பான ஆடியோ ஒன்று வந்தது. நீங்கள் அதை 48 மணி நேரம் கூட வெளியிடவில்லை. அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாமா?. தி.மு.கவிடம் கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் உள்ளதா? நான் அந்த ஆடியோவை அளிக்கிறேன். நீங்கள் வெளியிடுவீர்களா? அதைவிடுத்து என்னிடம் கதை சொல்லாதீர்கள். பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது தாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.கவின் தொடர் வலியுறுத்தலால் 2 நாட்களுக்கு பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை மீது அழுத்தம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது” என்று பேசினார்.