55 நகரங்களில் ஜி20 மாநாடுகள்

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவுக்கு அரசு முறை பயணமாக சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்குள்ள பாரத வம்சாவளியினரிடையே உரையாற்றுகையில், “உக்ரைன் போர் தொடங்கிய போதே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பலமுறை போர் நிறுத்தம் குறித்துபேசியுள்ளார். நானும் இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கினால் தீர்வை எட்டமுடியும். பாரதத்தின் வடக்கு எல்லைப் பகுதியில் நாம் சீனாவின் சவாலை எதிர்கொண்டுள்ளோம். அதேசமயம், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சனைகளையும் சமாளித்து வருகிறோம். பாரதம் தற்போது ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறது. இது மிகப்பெரிய பணி. உலகின் சக்திவாய்ந்த 20 நாடுகளை ஒன்றிணைத்து செல்ல வேண்டும். அடுத்த ஓராண்டில் பாரதத்தின் 55க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜி20 மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இது நமது தேசத்தின் பன்முகத்தன்மையை உலகுக்கு பறைசாற்றும் நல்லதொரு வாய்ப்பு. தேசத்தின் கலாச்சாரம், சிறப்பு உணவு வகைகள், உள்ளூர் பொருட்கள் உலகுக்கு காட்சிப்படுத்தப்படும். இதேபோல, பாரதத்தின் வேண்டுகோளை ஏற்று இந்த ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா சபை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கோதுமைக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் உலகின் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கும். ஜி20 மாநாடுகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என கூறினார். இதனிடையே, அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்திரியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஸ்காலென்பர்க்கை சந்தித்து பேசினார். அப்போது, பயங்கரவாதத்தால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், எல்லை கடந்த பயங்கரவாதம், வன்முறை, அடிப்படைவாதம் உள்ளிட்டவற்றை பற்றி விரிவாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது, “போதை பொருட்கள், சட்டவிரோத ஆயுத விற்பனை மற்றும் பிற வடிவிலான சர்வதேச குற்றங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஆழ்ந்த தொடர்பில் இருக்கும்போது, இந்த பயங்கரவாத விளைவுகளை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடக்கி விட முடியாது. இந்த பயங்கரவாதத்தின் மையம் பாரதத்துக்கு மிக அருகே அமைந்துள்ளது. எங்களுடைய அனுபவங்களும் பார்வையும் பிற நாடுகளூக்கு பயனுள்ளவையாக இருக்கும்” என்று ஜெய்சங்கர் கூறினார். மேலும், செக் குடியரசின் ஜன் லிபாவ்ஸ்கை மற்றும் ஸ்லோவேக்கியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ராஸ்டிஸ்லாவ் கேசர் ஆகியோரையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு பற்றி செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட மந்திரி ஜெய்சங்கர், பாரதம் மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் உறவுகள், நமது அண்டை நாடுகள், இந்தோ பசிபிக் விவகாரம் மற்றும் உக்ரைனில் நடைபெற்று வரும் போர் உள்ளிட்டவற்றை பற்றி பேசினோம் என்று தெரிவித்தார்.