வழக்கறிஞரை கைது செய்த என்.ஐ.ஏ

கேரளாவில் சமீபத்தில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் தலைவர்களுடன் தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளைத் தொடர்ந்து, டிசம்பர் 30, 2022 அன்று, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் எர்ணாகுளம் மாவட்டம் எடவனக்காட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது முபாரக் என்பவரை என்.ஐ.ஏ கைது செய்தது. சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் அவரை ஜனவரி 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பாக கேரளாவில் இருந்து என்.ஐ.ஏ அமைப்பால் கைது செய்யப்பட்ட பதினான்காவது நபர் இவர். தகவல்களின்படி, முகமது முபாரக் பி.எப்.ஐ அமைப்பின் கொலைக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார், மேலும் பி.எப்.ஐ அமைப்பின் அந்த குழுவினருக்கு இதற்கான பயிற்சிகளை அளித்துள்ளார். முகமது முபாரக் 2018ல் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் சுமார் 30 வழக்குகளில் ஆஜராகியுள்ளார். அவரது முகநூல் பக்கத்தில் உள்ள அவரது சுயவிவரத்தின்படி, அவரது மனைவியும் ஒரு வழக்கறிஞர் என்று தெரிய வந்துள்ளது. முன்னதாக என்.ஐ.ஏவின் செய்திக்குறிப்பில், “பி.எப்.ஐ அமைப்பினர், பல்வேறு மாநிலங்களில் ஹிந்து அமைப்பினர் உள்ளிட்ட மற்ற சமூகங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை குறிவைக்கும் வகையில் ஹிட் ஸ்குவாட்களை உருவாக்கி, பயிற்சி அளித்து, பராமரித்து வந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.