மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, நவம்பர் 28ம் தேதி முதல் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இதற்காக இணையதளம் மற்றும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நேற்று (டிசம்பர் 31) வரை இதற்கு அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. எனினும், தமிழகத்தில் 60 சதவீத பேர் மட்டுமே மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதில், அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 77 சதவீதம் பேரும் குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 51 சதவீதம் பேரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால நீட்டிப்பு வழங்க மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று இதனை செயல்படுத்த நடமாடும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.