பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த தயா பீல் என்ற ஹிந்து பெண், தலை துண்டிக்கப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது பாகிஸ்தானில் வாழும் ஹிந்து சிறுபான்மை சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட தயா பீலின் கிராமத்திற்குச் சென்ற பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனட்டர் கிருஷ்ண குமாரி, ”40 வயது விதவையான தயா பீல் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் தலை துண்டிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் இருந்தது. காட்டுமிராண்டிகள் அவரது உடலை முழுவதுமாக சிதைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க காவல் துறையினர் அந்த கிராமத்திற்குச் சென்றுள்ளனர்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ”இது குறித்த செய்திகளை நாங்கள் பார்த்தோம். எனினும், இது குறித்து முழு விவரங்கள் எங்களிடம் இப்போது இல்லை. பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என தெரிவித்தார்.