பாரதம் ஆஸ்திரேலியா உடனான தடையற்ற வர்த்தக நடவடிக்கை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் இரு தரப்பு வணிகமும் மேம்படும், கூட்டாண்மை வலுப்படும், பொருளாதார வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. கட்டண குறைப்புகள் நேற்று முதல் படிப்படியான அமலுக்கு வந்துள்ளன. இந்த கட்டண குறைப்பு பட்டியலில் ஆஸ்திரேலியாவில் இருந்து பாரதம் இறக்குமதி செய்யும் ஓட்ஸ், அழகு சாதன பொருட்கள், பார்லி, கம்பளி, பல முக்கிய தாதுக்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்குமான 85 சதவீதத்துக்கும் மேலான வரிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இனி வரியின்றி ஆஸ்திரேலிய ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்யலாம். பல பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் படிப்படியாக பூஜ்ஜியமாக குறைக்கப்படும். இதன் காரணமாக அவற்றின் விலையும் குறையும். ஆஸ்திரேலியா, பாரதத்தின் 17 சதவீத வர்த்தக பங்காளியாக உள்ளது. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் இருதரப்பு வணிகமும் 27 பில்லியன் டாலர்களில் இருந்து, 50 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஒப்பந்தம் காரணமாக, அடுத்த 5 ஆண்டுகளில் பாரதத்தில் கூடுதலாக 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், ஆஸ்திரேலிய முதலீடுகள் பாரதத்தில் அதிகரிக்கும். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாரத மாணவர்களும் இதனால் படிப்பு, வேலை உள்ளிட்ட பல விஷயங்களில் பயனடைவார்கள். இது குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “இது ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பம். இது இருதர்பபு வணிகத்திலும் ஒரு முக்கிய மைல்கல். இது ஏற்றுமதியை அதிகரிக்கும் என்பதோடு, புதிய வேலை வாய்ப்புகளையும் ஊக்குவிக்கும். இது நமது நாட்டில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இருதரப்பின் கூட்டாண்மையை வலுப்படுத்தும்” என தெரிவித்துள்ளார். பாரத ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இருதரப்புக்கும் இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்புக்கு இது முக்கியமான தருணம் என்ற குறிப்பிட்டுள்ளார்.