பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் மறைவையடுத்து நேற்று காலையில் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இறுதி காரியங்களை செய்துமுடிந்த பிரதமர் மோடி, சிறிது நேரத்திற்கெல்லாம் மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். மமதா பானர்ஜிக்கு கைகூப்பி பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஹவுரா ஜல்பைய்குரியை இணைக்கும், நாட்டின் ஏழாவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பணி முடிக்கப்பட்ட நான்கு ரயில்வே திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, “இன்று உங்கள் அனைவரையும் நான் நேரில் சந்திப்பதாக இருந்தது. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் என்னால் நேரில் வர இயலவில்லை. அதற்காக நான் உங்களிடமும் மேற்குவங்க மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்” என்று தெரிவித்தார். பின்னர் தேசிய கங்கா கவுன்சிலின் இரண்டாவது கூட்டத்திற்கும் பிரதமர் மோடி நேற்று தலைமை தாங்கினார். இப்படிப்பட்ட மிகக்கடினமான இறுக்கமான சூழலிலும், ஓய்வெடுக்காமல், குடும்ப பந்தத்திற்கு இடம் தராமல் தேசமே முதலில், தேசமே பெரிது என உழைக்கும் பிரதமரின் அர்ப்பணிப்புக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.