பிரம்மோஸ் சோதனை வெற்றி

தரை, போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்களில் இருந்து ஏவப்படும் பல்முனை பயன்பாட்டு பிரம்மோஸ் ஏவுகணைகளை ரஷ்ய கூட்டணியுடன் பாரதம் தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகளின் ஏவும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய விமானப் படை தனது எஸ்.யு 30 எம்.கே.ஐ ரக போர் விமானத்தில் இருந்து கடலில் 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை நோக்கி செலுத்தி சோதித்தது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வங்காள விரிகுடா பகுதியில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இதன் மூலம் எஸ்.யு 30 போர் விமானத்தில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள தரை அல்லது கடல் இலக்குகள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறனை இந்திய விமானப் படை மேம்படுத்தியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.