ராகுல் காந்தியின் ‘பாரத் ஜூடோ’ நடை பயணத்தில் எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இல்லையென காங்கிரஸ் குற்றச்சாற்றுக்கு துணை ராணுவப்படையான சி.ஆர்.பி.எப் மறுப்புத் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த டிசம்பர் 24ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ராகுலின் நடைபயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பிவைத்தது காங்கிரஸ். இந்நிலையில் இது தொடர்பாக சி.அர்.பி.எப் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கண்டிப்பாக பின்பற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. போதுமான அளவு பாதுகாப்பு படையினர் இதில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தரப்பில் தான் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் இது கவனிக்கப்பட்டு அவருக்கும் அவ்வப்போது இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 முதல் தற்போது வரை 113 தடவை இந்த பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ராகுல் மீறியுள்ளார்” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.