உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புரோலா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் சட்டவிரோத மதமாற்றம் செய்த வழக்கில் முசோரியில் உள்ள சர்ச் பாதிரி லாசரஸ் கொர்னேலியஸ், அவரது மனைவி புஷ்பா கொர்னேலியஸ் மற்றும் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மக்களை மதம் மாற்றுவதற்காக இந்த கிறிஸ்தவ மத போதகர் தனது குழுவுடன் புரோலா பகுதியில் உள்ள கிராமத்திற்குச் சென்றுள்ளார். அந்த கிறிஸ்தவ பாதிரிகளும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களும் சேர்ந்து தங்கள் கிராமத்தில் சட்டவிரோத மதமாற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டிய அந்த கிராம மக்கள், அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ‘ஆஷா அவுர் ஜீவன் கேந்திரா’ என்ற மிஷனரி அமைப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் ஐந்து கிராம மக்கள் மீது புரோலா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று காவல்துறை அதிகாரி கோமல் சிங் ராவத் தெரிவித்தார். முன்னதாக, இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள நேபாள வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், “கிறிஸ்தவ மிஷனரி மூலம் மதம் மாறுவதற்கு எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. என்னை மதம் மாற தூண்டுவதற்காக அவர்கள் பரிசு பொருட்களை வழங்கினர், திருமணத்திற்கு பணம் தரவும் முன்வந்தனர்” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் பல நேபாள குடும்பத்தினர் இப்பகுதிகளில் உள்ள ஆப்பிள் தோட்டங்களில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பேசிய அம்மாநில பா.ஜ.க தலைவர் மகேந்திர பட், மாநிலத்தின் புதிய மதமாற்றத் தடைச் சட்டத்தின் விதிகளின்படி மதமாற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.