உள்நோக்கம் கொண்ட திட்டம்

ஆதார் எண்ணுக்கு நிகராக பிரத்யேக எண் வழங்குவதாக கூறிவரும் தமிழக அரசு, அந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மக்களின் வங்கி கணக்கு, செல்போன் எண்ணுடன் ஆதார் அட்டை இணைக்கப்படுவதற்கு முன்பு, அனைத்து அரசு திட்டங்களிலும் இடைத் தரகர்கள் மூலம் ஊழல் நடந்தது. ஆதார் எண் இணைக்கப்பட்ட பிறகு, மானியங்களும், உதவிகளும் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதனால், அரசியல்வாதிகள், தரகர்கள், அதிகாரிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வந்த பணம் ரூ. 2.50 லட்சம் கோடி கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் சேமிக்கப்பட்டுள்ளது. அவை, ஏழை பயனாளிகளுக்கு நேரடியாக சென்று சேர்ந்துள்ளது. நிலைமை அப்படியிருக்க, அதற்கு இணையாக தமிழகத்தில் வேறொரு திட்டத்தை தமிழக அரசு கொண்டு வருவதாக கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. இந்த முயற்சி வீணானது. இதனால், நேரம், பணமும் தான் விரயமாகும். எனவே, தமிழக அரசு இதை உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து மானியங்களும், அரசு உதவிகளும் ஆதார் அட்டை மூலமாகவே மக்களுக்கு செல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.