கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்த அக்டோபர் 23ம் தேதி காரில் சிலிண்டர் குண்டு வெடித்தது. இதில் காரை ஓட்டி வந்த பயங்கரவாதி ஜமேஷா முபின் உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் ஏராளமான ரசாயனப் பொருட்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கவிரவாத அமைப்பு தொடர்புடைய குறிப்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், இவ்வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் பயங்கரவாதி ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜமேஷா முபினின் பயங்கரவாத சதித் திட்டங்களில் பங்கேற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள ஆசனூர் மற்றும் கடம்பூர் வனப்பகுதிகளில் நடைபெற்ற பயங்கரவாத சதித் திட்ட ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டங்கள், இவ்வழக்கில் முன்னரே கைது செய்யப்பட்ட பயங்கரவாதி உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது. குறிப்பாக, உயிரிழந்த ஜமேஷா முபின், முகமது அசாருதீன், ஷேக் ஹிதாயத்துல்லா, சனோபர் அலி ஆகியோர் பயங்கரவாதச் செயல்களை செயல்படுத்தும் சதி ஆலோசனைகளை நடத்தியுள்ளனர். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என என்.ஐ.ஏ கூறியுள்ளது.இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை குண்டுவெடிப்பை சிலிண்டர் குண்டுவெடிப்பு சம்பவமாக தி.மு.க அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில், இது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவம் என்று மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ள என்.ஐ.ஏ, இது தொடர்பாக 2 பயங்கரவாதிகளை இன்று கைது செய்துள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டது என்றும் என்.ஐ.ஏ குறிப்பிடுகிறது. தமிழக அரசின் உளவுத்துறை, இந்த கடினமான உண்மையை இப்போதாவது உணர்ந்து விழித்துக் கொள்ளுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.